Our Feeds


Wednesday, October 15, 2025

SHAHNI RAMEES

முடிந்தால் அடிப்படை சம்பளத்தில் 10 ரூபாவை அதிகரித்துக் காட்டுங்கள்!

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 - 2024 காலப்பகுதியில் இரு சந்தர்ப்பங்களில் 250 மற்றும் 350 ரூபா சம்பள அதிகரிப்பினை நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். எனவே முடிந்தால் இவ்வாண்டு அடிப்படை சம்பளத்தில் 10 ரூபாவையேனும் அதிகரித்துக் காட்டுமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 1750 ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எமது ஆட்சி காலத்தில் சம்பள அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது எதிரணியிலிருந்த மலையகப் பிரதிநிதிகளால் எவ்வித ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டவில்லை. மாறாக இடையூறுகளே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் நாம் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். கடந்த ஆண்டு இடம்பெற்ற சம்பள பேச்சுவார்த்தையின் போது 1750 ரூபாவை நாம் அடிப்படை சம்பளமாகக் கோரிய போது, ஜே.வி.பி. தொழிற்சங்கள் 2138 ரூபாவை அடிப்படை சம்பளமாகக் கோரியது.

அதற்கமைய ஜே.வி.பி. தொழிற்சங்கம் இன்றும் 2138 ரூபாவை அடிப்படை சம்பளம் என்ற நிலைப்பாட்டில் உள்ளதா? அவ்வாறில்லை எனில் 1700 ரூபா நியாயமான சம்பளம் எனக் கூறுகின்றீர்களா? ஆரம்பத்தில் 1700 ரூபா அடிப்படை சம்பளம் எனக் கூறப்பட்ட போதிலும், தற்போது அதனை நாட் சம்பளம் என்றே குறிப்பிடுகின்றனர். அடிப்படை சம்பளத்தில் எவ்வித அதிகரிப்பும் இன்றி மேலதிகக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது எவ்வித பயனும் அற்றது. அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்போம். அவ்வாறில்லை எனில் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பள பேச்சுவார்த்தை குறித்து அரசாங்கத்துக்குள்ளேயே தெளிவற்ற நிலைப்பாடு காணப்படுகிறது.


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் கூலி சம்பள முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இதனை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும்.  எமது ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தால் அந்த வர்த்தமானி அறிவித்தலை     இரத்து செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும். ஆரசாங்கம் நினைத்தால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற முடியும்.  2020இல் 250 ரூபா சம்பள அதிகரிப்பை நாம் பெற்றுக் கொடுத்தோம். 2024இல் 350 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்தோம். எனவே முடிந்தால் இவ்வாண்டு அடிப்படை சம்பளத்தை 10 ரூபாவால் அதிகரித்துக் காண்பிக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »