ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம்(14) ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியிலிருந்து 57 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று ஜோத்பூர் சென்றது.
தையாத் பகுதியில் இருக்கும் இந்திய இராணுவ நிலையம் அருகே அப்பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.இதில், மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
இந்தக் கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
