Our Feeds


Thursday, October 16, 2025

Zameera

மன்னார் நகர சபை கழிவு குவியலில் மூன்றாவது நாளாகவும் தீ பரவல்


 மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல் புதன்கிழமை(15) மூன்றாவது நாளாகவும் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து  வருகின்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமை (15) மாலை இடம்பெற்ற  கூட்டத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க  தலைமையிலான குழு மாலை 6 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதன் போது குறித்த பகுதி பாரிய புகை மண்டலமாக காட்சி அளித்தது.மேலும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடாக வாகன போக்குவரத்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டதோடு,சுவாசிக்க முடியாத வகையில் புகை மண்டலம் காணப்பட்டமையால்  பல மணி நேரம் குறித்த வீதியூடாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் புதன்கிழமை  (15) காலையும் அப்பகுதியில் பாரிய புகை பரவல் காணப்பட்டமையால் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள முன்பள்ளி பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது.

மேலும் பொது மயானத்திற்கு பின் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்ற போதும்,அங்கே வசிக்கின்ற பெண்கள்,ஆண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள்,கர்ப்பிணி தாய் மார் என அணைவரும்,சுவாச பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவுடன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன்,காதர் மஸ்தான்,மன்னார் நகர சபை தவிசாளர்,உறுப்பினர்கள் ,அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் ஆகியோரும் வருகை தந்து நிலமை யை நேரடியாக அவதானித்தனர்.

இதன் போது குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருகை தந்து தாம் இதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியப் படுத்தியதோடு,மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் குறித்த நடவடிக்கையான இப்பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

-தாங்கள் ஒவ்வொரு முறையும் இவ்வாறான பாதிப்பை எதிர் நோக்குவதாகவும்,அதிகாரிகளும்,அரசியல் வாதிகளும் தங்களுக்கு ஏமாற்று வாக்குறுதிகளை தந்து விட்டு செல்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க குறித்த பிரச்சினைக்கு வெகு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும்,மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

எனினும் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்த தோடு,தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »