Our Feeds


Tuesday, October 28, 2025

Zameera

பொலிஸ் மா அதிபரின் தவறான கருத்துக்கள் காரணமாக ஜகத் விதானவின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன


 தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சில நடவடிக்கைகள் பெரிதும் அரசியல்மயமாகி காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ் மா அதிபர் மாறிவிட்டார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் தெட்டத் தெளிவாக தெரிகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஓர் மக்கள் பிரதிநிதியாக ஜகத் விதான அவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது கடமைகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் மா அதிபரின் கருத்துக்கள் கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் தவறான கருத்துக்கள் காரணமாக, ஒரு குடிமகன் என்ற முறையிலும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் ஜகத் விதானவின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று இன்று (28) விசேட கருத்தை முன்வைத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர் அச்சுறுத்தல் காணப்படும் ஜகத் விதான, குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாட்டாளராக செயற்படும் போது அவரை குற்றவாளியாக அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்புகிறோம். ஜகத் விதான அவர்களது பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கிறோம்.

அரசாங்கம், பொலிஸ் மா அதிபர், சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட சகலரும் ஜகத் விதானாவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

220 இலட்சம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

220 இலட்சம் குடிமக்களுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் (ஆண்,பெண்), தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் (ஆண்,பெண்) மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினது பாதுகாப்பு தொடர்பில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் கருத்தால் முறைப்பாட்டாளர் குற்றவாளியாக மாற்றப்பட்டுள்ளார்.

பல மாதங்களாக எழுத்துப்பூர்வ கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதால், பொலிஸ் மா அதிபருக்கு முறையான உத்தரவுகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.

ஜகத் விதான அவர்கள் சிறந்த மக்கள் சேவைகளை ஆற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராவார்.

அவரது பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துவது நாட்டின் பாதுகாப்புத் தரப்புகளினது பொறுப்பாகும். பொலிஸ் தரப்பால் ஆற்ற வேண்டிய தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றப்படவில்லை.

பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கும் அறிக்கைகளை திரிபு படுத்த வேண்டாம் என்றும், முறைப்பாட்டாளர்களை குற்றவாளிகளாக மாற்ற வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »