Our Feeds


Thursday, October 30, 2025

Sri Lanka

கோட்டாபயவை நினைவுபடுத்தும் அனுர அரசு - சஜித்!



நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் விசித்திரமான நிபந்தனைகளை விதித்துள்ளது. 


இங்கு, அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படும் பெரிய வெங்காயத்தில் ஒரு கிலோவில் 8 வெங்காயங்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெங்காயமும் 125 கிராம் எடை கொண்டனவாகவும், பெரிய வெங்காயத்தின் விட்டம் கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அரசாங்கம் விதித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளைப் பார்க்கும்போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் தேங்காயின் சுற்றளவின் அடிப்படையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. அன்று இதை விமர்சித்து எதிர்க்கட்சியில் இருந்த மக்கள் விடுதலை முன்னணி தரப்பினர், இன்று அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு, கோட்டாபய ராஜபக்சவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, விலைகளைத் தீர்மானிப்பது வேடிக்கையான விடயமாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று (29) கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 


இந்த நிபந்தனைகளை நோக்குமிடத்து, பெரிய வெங்காயச் செய்கை விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்து கொள்வதை குறைக்கப் பயன்படுத்தப்படும் தந்திரமொன்றாகவே நாம் இதைப் பார்க்கிறோம். பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரி விதிப்பதன் மூலம் உள்நாட்டு வெங்காயச் செய்கை விவசாயிகளுக்கு அதிக விலையைப் பெற்றுத் தருவோம் என அரசாங்கம் வீராப்பு பேசியது, என்றாலும் வரியை விதிக்கப்பதற்கு முன்பு, அரசாங்கத்துடன் தொடர்புடைய நட்புவட்டார கூட்டாளிகள் மூலம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து, அதனை களஞ்சியப்படுத்தி வைப்பதன் மூலம் இறக்குமதியாளர்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 


எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் நிமித்தம் நாடு பூராகவும் மேற்கொள்ளும் பயணத்தில் விலச்சிய மற்றும் எலஹெர பகுதிகளில் உள்ள பெரிய வெங்காயச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளைச் சந்தித்த சமயம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விடயங்களை முன்வைத்தனர். கடந்த போகத்தில் ஒரு மூட்டை யூரியா உரத்தின் விலை 7000 முதல் 9000 ரூபா வரையிலும், டி.எஸ்.பி உரம் ரூ.9000-லிருந்து ரூ.12500 ஆக அதிகரித்து காணப்பட்டன. இதன் விளைவாக, ஒரு ஏக்கர் செய்கைக்கு ரூ.5 இலட்சம் செலவு ஏற்பட்டுள்ளது. விலங்குகளினால் ஏற்படும் சேதங்கள், காலநிலை பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


* விவசாயிகளிகளை விட நட்புவட்டார இறக்குமதியாளர்களையே அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது. 


இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொள்கைப் பார்க்கும் போது, 


விவசாயிகளிகளை விட நட்புவட்டார இறக்குமதியாளர்களையே அரசாங்கம் வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது. விவசாயிகளை இல்லாதொழிப்போம் என்பதற்கு பதிலாக விவசாயிகளை வலுப்படுத்துவோம் என்பதே அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்டது. எனவே, பெரிய வெங்காய விவசாயிக்கு உடனடியாக நீதியை நிலைநாட்டுங்கள். பெரிய வெங்காய விவசாயியை கைவிடும் கொள்கைகளை நிறுத்தி, தமது சொந்த காலில் வாழும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்கள். பொய்யான அரசியலையும், ஏமாற்று அரசியலையும் நிறுத்தி, பெரிய வெங்காய விவசாயியைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »