Our Feeds


Saturday, May 30, 2026

SHAHNI RAMEES

மொபைல் போனால் வந்த வினை - தங்கையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 14 வயதுச் சிறுவன் கைது!

 


ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில்

உள்ள வீடு ஒன்றில், தனியாக இருந்த 11 வயதுச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தர மறுத்ததால், அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயதுச் சிறுவனை இன்று  (30) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



கடந்த வியாழக்கிழமை (28) மாலையில், ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.



குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளார். தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில், 14 வயதுச் சகோதரனும் 11 வயதுச் சகோதரியும் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.


 


இந்நிலையில், 'டிக் டொக்' பார்ப்பதற்காகச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தருமாறு சகோதரன் கேட்டுள்ளார். அதற்குச் சகோதரி கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சகோதரன், தன் சகோதரியின் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.


 


இதனைத் தொடர்ந்து, தன் சகோதரியின் உடலை இழுத்துச் சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.


 


அதேநேரம், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை, வீட்டில் பிள்ளைகளைக் காணாமல் தேடியுள்ளார். அப்போது குளியலறைத் தண்ணீர் தொட்டியில் 11 வயது மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


 


இவ்வாறான நிலையில், 14 வயதுச் சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், அந்தச் சிறுவனே தன் சகோதரியைக் கொலை செய்துள்ளார் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவனைக் கைது செய்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸ் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »