“இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது.
இது நான் தீர்த்துவைக்கும் எட்டாவது போராக உள்ளது” எனத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நான் போர்களைத் தீர்ப்பதில் வல்லவன்” என்றும் கூறியிருக்கிறார்.இதுவரை எட்டு போர்களை நிறுத்தியதாக கூறும் ட்ரம்ப், அடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ட்ரம்ப் இஸ்ரேலுக்கு பயணித்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், “இஸ்ரேல் - காசா போர் ஓய்ந்துவிட்டது. இனி எல்லாம் இயல்பாக இருக்குமென நான் நம்புகிறேன்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஏற்படுவதில் கட்டாரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முயற்சிகளும் பாராட்டுக்குரியது.
தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே போர் இடம்பெற்று வருவதாகவும் கேள்விப்பட்டேன்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு தலிபான் படைகள் பதிலளித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்களும் பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “நான் அமெரிக்கா திரும்பியதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போரையும் தீர்த்துவைப்பேன். ஏனென்றால், நான் போர்களை தீர்ப்பதில் வல்லவன்” என்றார்.
இஸ்ரேல் பயணித்த ட்ரம்ப், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகுவை சந்திப்பதோடு, அந்நாட்டு பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்ததையடுத்து, ட்ரம்ப் எகிப்துக்குச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
