Our Feeds


Friday, October 31, 2025

Sri Lanka

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அரசுக்கு ஐந்து முதற்கட்ட முன்மொழிவுகள் - மனோ கணேசன்!


பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தமது முதற்கட்ட முன்மொழிவுகளாக ஐந்து பிரேரணைகளை முன்வைத்துள்ளார். 


சிறு பாடசாலைகளை மூடி விடும் திட்டம்

மாணவர் தொகை/சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் திட்டத்தை, மலையக பாடசாலைகள் தொடர்பில் இடை நிறுத்த வேண்டும். மலையகத்தின், புவியமைப்பு, ஜன அடர்த்தி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்படும் முடிவுகள், "மாணவர் இடை-விலகலை" (Dropouts) இன்னமும் அதிகரிக்க கூடும். 


கொழும்பு தேசிய பாடசாலைகள்

கொழும்பில் வளம் நிறைந்த தேசிய கல்லூரிகளான ரோயல், டி.எஸ். சேனநாயக, இசிபதன போன்றவற்றின் தமிழ் பிரிவுகளில் வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படட வேண்டும். இப்போது இது, சிங்கள, தமிழ் வகுப்புகளின் ஒப்பெட்டில் ஏறக்குறைய 12இற்கு 02 என்ற அளவில் இருக்கிறது. தமிழ் வகுப்பு தொகை அதிகரிக்கப்படுவது, வளமான பாடசாலைகளில் கல்வி பெற, கொழும்பில் வாழும் தமிழ் மொழி மூல மாணவருக்கு அதிக வாய்ப்புகளை தரும். மேலும், ஒரே கூரையின் கீழ் தமிழ், சிங்கள, முஸ்லிம், மாணவர் கல்வி பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இது தேசிய ஒற்றுமைக்கு சாதகமானது. 


தமிழ் பாடசாலைகளுக்கான ஆளணி

தற்போது கல்வி துறை ஆளணியை கல்வி அமைச்சு மீளாய்வு செய்யப்படுவதாக பிரதமர் எனக்கு தெரிவித்தார். இந்நிலையில், ஒன்பது மாகாண மட்டங்களிலும், அதேபோல், பன்மொழி பாடசாலைகள் அல்லது பிரிவுகள் உள்ள கல்வி வலய மட்டங்களிலும், மேலதிக கல்வி பணிப்பாளர்கள் (ADE) என்ற பதவிகளை கட்டாயமாக உருவாக்குதல். இந்த பணிப்பாளர்கள், தமிழ் பாடசாலைகள், ஆசிரியர்களின் நிர்வாக மற்றும் பிரத்தியேக பிரச்சினைகளுக்கான வடிகால் வாயிலாக இருக்க வேண்டும்.  


மலையக தமிழ் மாணவரின் குறை கல்வி வளர்ச்சி

பின்தங்கிய பிரிவினரையும், ஒப்பீட்டளவில் வளர்ந்து விட்ட பிரிவினரையும் ஒரே அடிப்படையில் பராமரிப்பது தவறாகும். ஆகவே, மலையகத்தின் பின்தங்கிய கல்வி நிலையை கருத்தில் கொண்டு, அரசாங்கம், விசேட ஒதுக்கீட்டு கொள்கையை (Affirmative Policy) நடைமுறைப்படுத்த வேண்டும். மனித வளம், பெளதீக வளம் ஆகியன விசேடமாக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்க படுவதன் மூலமே மலையக மாணவர்களின் கல்வியை தேசிய மட்டத்துக்கு வளர்ந்து எடுக்க முடியும்.   


சிறப்பு பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான தேவை

தென்-இலங்கையில், தமிழ் மாணவர் கல்வி பெறும் பாடசாலைகள் அமைந்துள்ள மாவட்டங்களான கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, கண்டி, மாத்தளை, நுவரெலியா, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, குருநாகல், புத்தளம், ஆகியவற்றில், சிறப்பு பாட ஆசிரியர்களுக்கான குறைபாடு அபரிதமாக இருப்பதை கருத்தில் கொண்டு, விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம், கணக்கியல், வர்த்தகம், ஆகிய பாடங்களுக்கான தமிழ் மொழி மூல ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றை, குறை வளர்ச்சி நிலையில் உள்ள மலையக கல்வி துறைக்கான, விசேட (exclusive) நிறுவனமாக நிறுவுதல். இதற்கான இந்திய அரசின் உதவியை பெறுவதில் ஒத்துழைக்க நாம் தாயாக இருகின்றோம்.


இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது:

நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில். எனது மேற்கண்ட இடையீட்டு (Intervention) உரைக்கு, பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, நான் எழுப்பிய விடயங்கள் தமது கவனத்தைப் பெறுகின்றன என எனக்கு உறுதி அளித்தார். மேலும், பள்ளிகளை மூடும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.



எனது முதற்கட்ட முன்மொழிவுகளை அடுத்து, தமிழ் கல்வியிலாளர்களுடன் கலந்து ஆலோசித்து, கல்வி மறுசீரமைப்பு திட்டத்தில், தமிழ் பாடசாலை கல்வி தேவைகள் தொடர்பில் உள்ளடக்கப்பட வேண்டிய மேலும் பல விடயங்களை, கல்வி அமைச்சருடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்தி, அவசியமான மேலதிக முன்மொழிவுகளையும் முன்வைக்க உத்தேசித்துள்ளேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »