சூரிய மின் கலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டிருக்கும் நேரத்தில், கூரைகள் மீது பொருத்தப்பட்டிருக்கும் சூரிய மின் கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகுக்கான மின்சாரக் கட்டணம் 37 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டது.
பின்னர் அது 24 ரூபாவாகக் குறைக்கப்பட்டு, தற்போது 18 ரூபாவாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
நிலைபேறுதகு சக்தியை பாதிக்கும் செயலே இதனால் நடக்கும். இவ்வாறு செலுத்தப்படும் கட்டணத் தொகைகள் குறைக்கப்படும் போது, சூரிய சக்தியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த நுண் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, சூரிய சக்தியின் பால் செல்லும் மக்களினது உற்சாகத்தை அழிக்கும் செயலாக இது அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே, சூரிய மின் சக்தி உற்பத்திக்குச் செலுத்தப்படும் கட்டணத் தொகைகளைக் குறைக்காமல், ஏலவே காணப்பட்ட முந்தைய கட்டண நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70% ஐ எட்டும்போது, இதில் LNG யையும் சேர்த்துள்ளனர். LNG என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்ல.
நிலக்கரியுடன் ஒப்பிடும்போது கார்பன் உமிழ்வு குறைவாக காணப்பட்டாலும், இது கந்தகத்தை வெளியேற்றுவதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
LNG என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு, யுகதனவி மின்சார உற்பத்தி திட்டத்தை உதாரணமாக குறிப்பிடலாம்.
யுகதனவி இன்னும் எரிபொருள் மற்றும் டீசல் மூலமே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையமாகவே காணப்படுகின்றது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நாடுவோரை அச்சமடைய செய்யாமல், சூரிய ஆற்றலுக்கு செலுத்தப்படும் உரிய கட்டணத் தொகையை பெற்றுக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
