Our Feeds


Friday, October 10, 2025

Sri Lanka

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கமாட்டோம் - இராமலிங்கம் சந்திரசேகர்!


தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்நாட்டில் கடந்த 76 வருடகால அரசியலானது மேட்டுக்குடிகள், தனவந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான அரசியலாக இருந்து வந்தது. இவர்களின் தாளத்துக்கேற்பவே அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டனர். 

ஆட்டுவிக்கப்பட்டனர். இந்நிலைமைய நாம் மாற்றியமைத்துள்ளோம். மேட்டுக்குடிகள் மற்றும் உயர் வர்க்கம் வசமிருந்த அரசியல் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

எனவே, மக்களை மதிக்கின்ற, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற, உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி திகழ்கின்றது. 

ஆகவே இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் முன்வரமாட்டார்கள். மாறாக அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டு அதன் பயணத்தை வலுப்படுத்திவருகின்றனர்." எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்நாடு எந்நிலையில் இருந்தது. பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை மீட்டுள்ளோம். பொருளாதாரத்தை வளப்படுத்திவருகின்றோம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் சுதந்திரமாக நாடு திரும்புவதற்குரிய சூழ்நிலை நிலவுகின்றது.

இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கும் முடிவுகட்டப்பட்டுள்ளது.  எனவே கடந்த ஒரு வருடத்தில் நாம் கடந்து வந்த பாதை மகிழ்ச்சியளிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சர்வதேச விளையாட்டு மைதானம்கூட நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. 

அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகின்றது. எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »