Our Feeds


Thursday, October 30, 2025

Sri Lanka

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் - ஜனாதிபதி!


நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். 


போதைப்பொருளுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,


போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும்.


அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக போதைப்பொருளை தடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். போதைப்பொருளுக்கு உதவும் பொலிஸார் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் விலக்குவோம்.


போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும் என்றார்.


இந்தத் தேசியத் திட்டத்தில், மத குருமார்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 


போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதை நோக்கதாக கொண்ட தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 'முழு  நாடும் ஒன்றாக' தேசிய வழிநடத்தல் சபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில்  கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முதன்முறையாக கூடியது.


போதைப்பொருள் பாவனையை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கும் பொருட்டு நாடும் ஒன்றாக என்ற தேசிய கண்காணிப்பு செயற்திட்டத்துக்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இந்த செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்காக தேசிய வழிநடத்தல் சபை ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய தேசிய வழிநடத்தல் சபையானது போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழித்தல், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் ஒழிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கல்இபொதுசன நிறுவனங்களை ஒன்றிணைந்து ஊடக கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »