இலங்கையின் அபிவிருத்திக்காக கைகோர்த்து பலமான பயணமொன்றுக்கு சீனா தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹொங் (Qi Zhenhong)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
'சீனாவும் உலகமும் - சுபீட்சமான எதிர்காலத்திற்கான சீன - இலங்கை கலந்துரையாடல்' நிகழ்வு கொழும்பு மரீனோ பீச் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹொங்,
"சீனாவின் அடுத்த 5 ஆண்டுகால அபிவிருத்தி, இலங்கைக்கும் புதிய பாதைகளைத் திறந்துவிடும். நாங்கள் இலங்கையுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக உள்ளோம்.
அதன் மூலம் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.
புதிய பரிமாணங்கள் மற்றும் புதிய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சியை எங்களால் வேகப்படுத்த முடியும்." என்றார்.
அத்துடன், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த கருத்து தெரிவிக்கையில்,
"புத்தாக்கங்கள் இலங்கைக்கான எதிர்காலப் பாதைக்கு வழிவகுக்கும். ஆனால் எமக்கு சில தடைகள் உள்ளன. எமது பொருளாதார கஷ்டங்களை நாம் வெற்றிகொண்ட உடனேயே, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புத்தாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
இதற்காக உலகின் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம். இதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்." என்று குறிப்பிட்டார்.
