Our Feeds


Wednesday, October 29, 2025

Sri Lanka

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறித்து சி.ஐ.டியில் முறைப்பாடு!



சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார். 


பொலிஸ் தலைமையகத்தில் பொறுப்பான உயர் பதவி வகிக்கும் குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை இடமாற்றம் செய்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தாம் உட்பட உயர் அதிகாரிகள் தொடர்பில் தவறான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கியமை மற்றும் பொலிஸாரின் மிகவும் இரகசியமான உள்ளக கோவைகளை வெளித் தரப்பினருக்கு வழங்கியுள்ளமை தொடர்பான தகவல்கள் வௌியானதை அடுத்தே, பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் ஒருவருடன் இணைந்து, பொலிஸ் மா அதிபர் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் ஆகியோர் தொடர்பில் போலிச் செய்திகளை உருவாக்கும் ஒலிப்பதிவொன்றையும் பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். 


இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகின்றது. 


அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடமிருந்தும், குறித்த ஒலிப்பதிவில் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகக் கூறப்படும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. 


அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »