Our Feeds


Wednesday, October 8, 2025

Sri Lanka

நாடு வங்குரோத்தாக விசேட காரணம் மோசமான கடன் முகாமைத்துவமாகும் - சஜித் பிரேமதாச!


அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில் அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதற்கு  எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதுடன் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் எடுத்த புதிய கடன்களை சபைக்கு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (07) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்தான நாட்டை அனுபவிக்க வழிவகுத்த விசேட காரணிகளில் ஒன்று தான் மோசமான கடன்  முகாமைத்துவமாகும். 

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டிருந்த சமயம் நாட்டைப் பொறுப்பேற்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி வழிநடத்தும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். 

இதன்பிரகாரம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அதற்கான பொருளாதார தயார்நிலையையும் தெரிந்து  கொள்ள பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

தற்போது இலங்கையின் ஒட்டு மொத்த கையிருப்புத் தொகை எவ்வளவு?  கடந்த ஆண்டில் கையிருப்பில் காணப்பட்ட மாதாந்த மாற்றங்கள் யாவை?

தற்போது நாட்டின் மொத்த கடன் தொகை எவ்வளவு? அந்தக் கடனில் உள்நாட்டுக் கடன் எவ்வளவு, வெளிநாட்டுக் கடன் எவ்வளவு என்பதைத் தனித்தனியாகக் கூற முடியுமா? 

இதில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகைகள் யாவை? வெளிநாட்டுக் கடனைப் பொறுத்தவரை, இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிணைமுறி  பத்திரதாரர்கள் என தனித்தனியாகத் தகவல்களை வழங்க முடியுமா?

இந்த ஆண்டில் கடன் தவணைகள் மற்றும் வட்டியாக செலுத்தப்படும் முழுத் தொகை எவ்வளவு? அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது எவ்வாறு மாறுகிறது என்ற முறையை வருடாந்தம் தனித்தனியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா?

அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடனைச் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை தொடர்ந்தும் நிலைபேறானதாக பேணிச் செல்ல அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம் யாது? 

இந்த இலக்குகளில் எத்தனை விகிதம் இந்த ஆண்டு அடையப்பட்டுள்ளது? அடுத்த 5 ஆண்டுகளில் இது எவ்வாறு செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது?

கடனைத் திறம்பட செலுத்த ஆண்டுதோறும் பேணிச் செல்ல வேண்டிய மதிப்பிடப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல் எவ்வளவானதாக அமைந்து காணப்பட வேண்டும்? 

இதற்காக கடந்த ஆண்டில் அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் யாவை? இந்தத் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக அடைந்து கொள்ளப்பட்ட இலக்குகள் யாவை? 

கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடாக எவ்வளவு தொகையை இலங்கை பெற்றது? அடுத்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் எதிர்பார்க்கும் அந்நிய நேரடி முதலீடுகளின்  அளவு யாவை ? எந்தெந்த துறைகளில், எந்த தொகைகளில் இந்த முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது? 

இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரியை இரத்துச் செய்வதாலோ அல்லது தொடர்வதாலோ பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் கணிப்பீடொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா ? 

ஆமெனில், அது தொடர்பான புள்ளிவிபர தரவு அறிக்கைகள் யாவை ? அவற்றை சபையில் சமர்ப்பிக்க முடியுமா? ஆகிய கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் முறையான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார்

இதற்கு பதிலளிக்க எழுந்த ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நிதி பிரதி அமைச்சர் தற்போதை சபையில் இல்லை. அதனால் இந்த கேள்விகளுக்கு இந்த வாரத்துக்குள் பதிலை வழங்குவதாக தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »