Our Feeds


Wednesday, October 8, 2025

Sri Lanka

வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் ராஜபக்ஷர்கள் கலக்கமடைவது ஆச்சரியமல்ல - மஹிந்த ஜயசிங்க!



தாஜுதீன் படுகொலை  தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது  ராஜபக்ஷர்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல,ஐக்கிய மக்கள் சக்தி ஏன் கலக்கமடைகிறது என்பது எமக்கு தெரியவில்லை. தாஜூதீனின் படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க  வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். அவர்கள் எவ்வாறு நீதியை பெற்றுக்கொடுத்தார்கள். சாட்சியங்களை அழித்தார்கள். இதனால் தான் இன்றும்  விசாரணைகள்  தொடர்கிறது. நடுங்க வேண்டாம் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற  விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2015.01.08. ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கும் தேர்தல் பிரச்சார மேடைகளில் ' தாஜூதீனின் படுகொலைக்கு நீதி' என்பது பிரதான பேசுபொருளாக இருந்ததை ஐக்கிய மக்கள் சக்தி இன்று மறந்து விட்டது. மைத்திரி ,ரணில் மற்றும் சஜித் அரசாங்கம் தாஜுதீன் படுகொலை குறித்து முறையான விசாரணைகளை  மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை.

தாஜுதீன் படுகொலை  தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது  ராஜபக்ஷர்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, படுகொலையுடன் தொடர்புடையவர்களே கலக்கமடைந்துள்ளார்கள். பொதுஜன பெரமுன ஊடக சந்திப்பை நடத்தி பொலிஸ் திணைக்களம் மீது குற்றச்சாட்டுகிறது. இவ்வாறான நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கலக்கமடைந்துள்ளது.

தாஜூதீனின் படுகொலையை  ராஜபஷர்களின்  தேவைக்கமைய  விபத்தாக மாற்றியமைப்பதற்கு அப்போதைய பிரதி பொலிஸ்மா அதிபர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். முன்னாள் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி போலியான பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்தார்.அவர் தற்போது உயிருடன் இல்லை. பிற்பட்ட காலத்திலான விசாரணைகளில் தாஜூதீன்  கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை வெளிப்பட்டது.

ராஜபக்ஷர்களுடனும், நாமல் ராஜக்ஷவுடனும் இன்று கைகோர்த்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர்  தாஜுதீன் படுகொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அன்று குறிப்பிட்டதை மீண்டும் செவிமெடுக்க வேண்டும். 'அரச காலத்தில் தண்டனை வழங்குவதை போன்றே தாஜூதீனுக்கு தண்டனை வழங்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்., இவர் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மாளிகையில் இருந்தவாறு ஜனாதிபதியின் பாரியார் குறித்த நபர் ஒருவருக்கு 46 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்' என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகள் தற்போது வெளிவரும் போது ராஜபக்ஷர்கள் கலக்கமடைந்துள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி ஏன் கலக்கமடைகிறது என்பது எமக்கு தெரியவில்லை. தாஜூதீனின் படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க  வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். அவர்கள் எவ்வாறு நீதியை பெற்றுக்கொடுத்தார்கள். சாட்சியங்களை அழித்தார்கள். இதனால் தான் இன்றும்  விசாரணைகள்  தொடர்கிறது.

கடந்த காலங்களில் அழித்த சாட்சியங்கள் இன்று உயிர்பெற்றுள்ளன.கஜ்ஜா மற்றும் இவர்களின் சகாக்கள் வெளிப்படுத்தும் விடயங்களால் கலக்கமடைந்துள்ளார்கள். வெளியாகும் தகவல்களினால்   நடுங்குகிறார்கள். தாஜுதீனின் பெயரை கேட்கும் போது நடுங்குகிறார்கள். விசாரணைகளின் முன்னேற்றத்தை  பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளிப்படுத்தும் போது அவர் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.தாஜுதீனின் பெயரை கேட்கும் போது நடுங்குபவர்கள்  குற்றமிழைக்காவிடின் தைரியமாக இருக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »