கொழும்பில் உள்ள ஒரு உம்ரா பயண முகவர் மூலம் சென்ற 32 உம்ரா யாத்ரீகர்கள் குழு, டம்மி விமான டிக்கெட்டுகளை (dummy air tickets) வைத்திருந்ததால், மதீனா விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வர அனுமதிக்கப்படவில்லை.
கொழும்பு, மரதானையில் உள்ள ஒரு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பயண முகவர், 32 யாத்ரீகர்களிடமிருந்து முழுப் பயணத்திற்குமான பணம் பெற்று, புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவிற்குள் உள் பயணம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவற்றையும் சேர்த்துள்ளார்.
சிக்கித் தவித்த உம்ரா பயணிகள், தம்மை அனுப்பிய முகவரைத் தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்த நிலையில் குறித்த ட்ராவல்ஸ் ஓனர் தமது தொலைபேசியை Off பண்ணி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உம்ரா பயணிகள் பெரும்பாலும் பதுளை, வெலிமட மற்றும் பண்டாரவள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
குழுவை அழைத்து சென்ற முகவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹஜ் கமிட்டித் தலைவர் ரியாஸ் மிஹ்லார் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் கலாச்சார திணைக்கள வட்டாரங்கள், குழுவை அனுப்பிய நபர் பதிவு செய்யப்பட்ட உம்ரா பயண ஆபரேட்டர் அல்ல என்று தெரிவித்தன. பயண ஏற்பாடுகளைச் செய்த ஒரு IATA முகவர் மூலம் அவர் பயணிகளை அனுப்பியிருப்பார்.
பிந்திக் கிடைத்த தகவல்களின் படி, குறித்த பயணிகள் குழு தமது மேலதிகமான சொந்த செலவில் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
