Our Feeds


Saturday, November 1, 2025

Sri Lanka

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும் - திலும் அமுனுகம!


இலங்கையில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதற்காகவே நிதி சேகரித்துள்ளோம்.அந்த நிதியை அந்த நோக்கத்துக்காக மாத்திரமே செலவிடுவோம் என புலம்பெயர் தமிழ் அமைப்பினர் என்னிடம் தெளிவாக குறிப்பிட்டார்கள். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமைய அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும் என முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுச்சொத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அவரை கைது செய்தது. 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் பல்லாயிரம் கோடி பெறுமதியிலான அரச சொத்துக்களுக்கு தீ வைத்தார்கள்.அவை பொதுச்சொத்துக்கள் இல்லையா,


ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு எதையும் செய்வோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.அவ்வாறாயின் இவர்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நாட்டில் மீண்டும் 88 மற்றும் 89 கால நிலைமையையும் ஏற்படுத்துவார்கள்.


அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கு அமைவாகவே செயற்படுகிறது. தன்பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை, தண்டனைச் சட்டக்கோவை திருத்தம், புதிய கல்வி முறைமை உள்ளிட்ட விடயங்கள் அவர்களின் நோக்கங்களுக்கு அமைவாகவே கொண்டு வரப்பட்டுள்ளன.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக நான் பதவி வகித்தேன்.அப்போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சந்திப்பதற்கு கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தேன்.அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.


புலம்பெயர் அமைப்புக்களுடனான சந்திப்பின்போது மாங்குளம்,பரந்தன் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவ உத்தேசித்துள்ளோம்.


அங்கு முதலீடு செய்யுங்கள் என்று வலியுறுத்தினேன்.அப்போது புலம்பெயர் தமிழ் அமைப்பினர் தமிழ் மக்களுக்கு நாங்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறோம்.இலங்கையில் தனி இராச்சியத்தை உருவாக்குவதற்காகவே பொது நிதியம் ஸ்தாபித்துள்ளோம்.அந்த நிதி அதற்காகவே பயன்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டார்கள்.


புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமைய அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும்.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை மகாநாயக்க தேரர்கள் கவனித்து வருகிறார்கள். வெகுவிரைவில் பிரதிபலன் கிடைக்கப்பெறும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »