(இணையத்தள செய்திப் பிரிவு)
(129 ஆவது அத்தியாயமான) கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் இலக்க 03 இனைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் தங்குமிட வசதிகளுடன் கூடிய தங்ககங்கள் மற்றும் விருந்தகங்களில் பணிபுரியும் உணவுப் பானங்களைப் பரிமாறும் பெண் ஊழியர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் பணியாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த பணிகளுக்காக கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் பணிககொடையை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் ஆக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
