(இணையத்தள செய்திப் பிரிவு)
கொலன்னாவை முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் கொழும்பு துறைமுகம் தொடக்கம் கொலன்னாவை முனையம் வரைக்குமான 05 குழாய் வழிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது.
குறித்த குழாய் வழிகள் மிகவும் பழையவையாவதுடன், கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கசிவுகள் ஏற்பட்டுள்ளன. அதனால்,நம்பகமான குழாய்த் தொகுதி இருக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, அதற்கான கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக இதற்கு முன்னரும் கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டிருப்பினும், குறித்த முன்மொழிவுகள் மூலம் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை.
அதனால், இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய பெறுகைச் செயன்முறையை முடிவுறுத்தி, கொழும்பு துறைமுகத்தின் டொல்ஃபின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து கொலன்னாவை முனையம் வரைக்கும் 18 அங்குலம் மற்றும் 14 அங்குலம் விட்டத்துடன் கூடிய குழாய் உள்வழியை சோதனை செய்யக்கூடிய வகையிலான இயந்திரோபகரணங்களைப் பயன்படுத்தக் கூடிய 02 குழாய் வழிகளை நிர்மாணித்தல், கொழும்பு துறைமுகத்தின் டொல்ஃபின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து சேரம் வாயில் வரைக்கும் 12 அங்குல விட்டத்துடன் கூடிய கடலுக்கு அடியில் செல்லும் குழாய் வழியை நிர்மாணித்தல் மற்றும் கொழும்பு துறைமுகம் மற்றும் கொலன்னாவை முனையங்களை தேவைக்கேற்ப மாற்றியமைத்தல் போன்ற கருத்திட்டக் கூறுகளுடன் கூடிய ‘கொலன்னாவை முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டம்’ பொறியியல், பெறுகை, நிர்மாணித்தல் மற்றும் இயக்குதல் (EPCC) கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
