Our Feeds


Wednesday, November 26, 2025

Admin

சுரண்டிப் பிழைக்கும் டியூசன் மாபியா - கபீர் ஹாசிம்!


ஆண்டுக்கு பல பில்லியன் ரூபா வருமானம் பெறும் டியூசன் மாபியா என்ற கைத்தொழில் துறை ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களை சுரண்டிப் பிழைக்கிறது. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த டியூசன் மாபியாவை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது



பாடசாலை கல்வி முறைமையில் தற்போதைய நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காத சூழல் காணப்படுகிறது. பல்கலைக்கழக கட்டமைப்பிலும் இவ்வாறான நிலைமையே  காணப்படுகிறது. ஆகவே இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.இல்லாவிடின் மாணவர் சமுதாயம் தவறான வழிக்கே செல்லும்.



இந்த நாட்டில் அரிசி மாபியா, மின்சார மாபியா என்று பல மாபியாக்களும் காணப்படுகின்றன. ஆண்டுக்கு பல பில்லியன் ரூபா வருமானம் பெறும் டியூசன் மாபியா என்ற கைத்தொழில் துறையும் காணப்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களை சுரண்டிப் பிழைக்கும் மாபியாவாகவே இந்த டியூசன் மாபியா காணப்படுகிறது.



தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த டியூசன் மாபியாவை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டது. ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  தேர்தல் காலத்தில் இந்த டியூசன் மாபியாக்கள்  தேசிய மக்கள் சக்திக்கு  செலவழித்ததாக  குறிப்பிடப்படுகிறது. ஆகவே அந்த நன்றி கடனுக்காக அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளது.



கல்வி மற்றும் உயர்கல்வி துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. புதிய கல்வி மறுசீரமைப்பு நாட்டுக்கு அத்தியாவசியமானது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது  தேசிய கல்வி ஆணைக்குழு கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கொள்கையை வெளியிட்டது.இந்த அறிக்கையின் பரிந்துரைகளை புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றார்.



இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய  கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2022 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு  வெளியிட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கொள்கையை அடிப்படையாகக்  கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. டியூசன் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டது. புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »