200 வருடகாலமாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெருந்தோட்ட மக்களுக்கு கட்டம் கட்டமாக தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை மலினப்படுத்தும் வகையில் எதிர்தரப்பினர் கருத்துக்களை முன்வைப்பது நியாயமற்றது. ஒரு தரப்பினர் இனவாதமாகவும் பேசினார்கள்.இது ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஒருசிலர் இனவாதமாகவும் பேசியுள்ளார்கள்.இது ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா?
நாட்டின் பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிப்பு செய்து, அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும் பெருந்தோட்ட மக்கள் கடந்த 200 ஆண்டுகாலமாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவர்களின் சம்பள விவகாரம் பிரதான பிரச்சினையாகவே காணப்பட்டது.இதற்கு தீர்வு காணும் பொருட்டு முதற்கட்டமாக அரசாங்கத்தால் அவர்களுக்கு நாளாந்தம் 200 ரூபா வழங்கி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெருந்தோட்ட மக்களின் அடி ப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை மலினப்படுத்துவதை போன்று அல்லது எட்டி உதைப்பதை போன்று எதிர்க்கட்சியினர் பேசுவது முறையற்றது. இந்த சம்பள அதிகரிப்பு நியாயமானதே.
பல்வேறு சிறந்த கொள்கைத் திட்டங்களை முன்னிலைப்படுத்தியதாகவே வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு முரணற்ற வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் போலி குற்றச்சாட்டுக்கள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.
