வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் நம்பிக்கை தருகின்ற விதமான கருத்துக்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கிலுள்ள தொழிற்சாலைகள் தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்து, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் இந்த அரசாங்கம் அணைத்துக்கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றில் இன்று (11) 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட இராண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பல தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை ஆகிய இவ்வாறான தொழிற்சாலைகளை மீள இயங்கச்செய்வது குறித்து கவனஞ்செலுத்துங்கள். புறக்கணிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
அத்தோடு ஜனாதிபதியவர்களின் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திலும், அரசியல் கைதிகள் விடயத்திலும் நம்பிக்கை தரும் விதமான கருத்துக்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களையும் அணைத்துக்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்
விஜயரத்தினம் சரவணன்
