எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஆளும் தரப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் மக்களின் காணி விடுவிப்பு பற்றி எவ்விடத்திலும் பேசியதில்லை. காணி விடுவிப்பு நிகழ்வுக்கு நாடா வெட்டுவதற்கு மாத்திரமே இவர்கள் செல்கிறார்கள். மிகுதியாகவுள்ள காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் இன பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைந்து, சிங்கள இன பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. குடியேற்றங்களே இதற்கு பிரதான காரணமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஒவ்வொரு வரவு - செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்தி நிதி ஒதுக்கப்படுவதாக அரசாங்கங்கள் குறிப்பிட்டன.இம்முறையும் அவ்வாறான நிலையே காணப்பட்டது.
யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டன.. அந்த மாகாணங்களின் அபிவிருத்திக்காக பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படவில்லை. கல்வித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த காலங்களில் வரவு - செலவுத் திட்டத்தில் 6 சதவீத மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாக வந்தார். அவர் தான் இன்று கல்வி அமைச்சராக உள்ளார். ஆனால் கல்வி அமைச்சுக்கு 6 சதவீதம் மானியம் ஒதுக்கப்படவில்லை.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் உரையாற்றிய போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்குள் இருந்த பாடசாலை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புசார் ஆலோசனை குழு கூட்டத்தில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.இதற்காக நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆளும் தரப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் காணி விடுவிப்பு பற்றி எவ்விடத்திலும் பேசியதில்லை.காணி விடுவிப்பு நிகழ்வுக்கு நாடா வெட்டுவதற்கு மாத்திரமே இவர்கள் செல்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் பாலடிவேட்டை, காயங்கேணி, கல்லடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் காணிகள் மற்றும் இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படவில்லை.
வலிகாமம் வடக்கில் ஒரு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 2500 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம் உள்ளது. அதேபோல் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள காணிகளும் இராணுவ வசம் உள்ளது. காணிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு வீதிகள் மாத்திரமே விடுவிக்கப்படுகின்றன.
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு சலூன்தான் உள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் ஒன்றை விட பல சலூன்களை இராணுவத்தினர் நடத்துகிறார்கள்.இது தான் உண்மை.
தேசிய மக்கள் சக்தியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் இனி வடக்கு, கிழக்குக்கு இனி செல்ல முடியாது. அமைச்சர் சந்திரசேகரை மக்கள் தெரிவு செய்யவில்லை. அவர் தேசியப் பட்டியலில் தான் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை ஒன்று புதிதாக பிரதிஸ்டை செய்யப்பட்டமை தற்போதைய பிரச்சினையான காணப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பில் எமது கட்சியின் மூத்த தலைவரான காலஞ்சென்ற சம்பந்தன் 20 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார்.
1827 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் இன பிரதிநிதித்துவம் 81 சதவீதமாகவும், சிங்கள இனத்தவர்களின் சதவீதம் 1 ஆகவும் காணப்பட்டது. ஆனால் தற்போது தமிழ் இன பிரதிநிதித்துவம் 32 சதவீதமாகவும், சிங்கள இன பிரதிநிதித்துவம் 26 சதவீதமாகவும் காணப்படுகிறது. குடியேற்றங்களே இதற்கு பிரதான காரணம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
