தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் நான்கு சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழனுக்குத் தெரிவித்தன.
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) நண்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என பெயர் குறிப்பிட விரும்பாத ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தரொருவர் கூறினார்.
இதற்கமைய, இரண்டு தமிழர்களையும் இரண்டு முஸ்லிம்களையும் தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இக்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 19 இலிருந்து 14ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இரண்டு வருட பதவிக் காலத்தைக் கொண்டு இந்தக் குழு, கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 01ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதனூடாக இந்த ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினத்தவர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் தெரியவந்தது.
இதனால், ஆளும் அரசாங்கத்துக்கெதிராக பாரிய விமர்சனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
