சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள 41 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அபாயமுள்ள இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு மத்திய நிலையங்களுக்கு இடம்பெயருமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (10) அறிவித்தது.
அதற்கமைய, நேற்றிலிருந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு அவர்களை தற்காலிகமாக பாதுகாப்பு மத்திய நிலையங்களிலேயே தங்கியிருப்பதற்கான வசதிகளை செய்துகொடுக்கமாறு அந்த நிறுவனம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம், கண்டி மாவட்டத்தில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்ஹாகேகோரள, தெல்தொட்ட, பூஜாபிட்டிய, கங்கஹிஹலகோரள, பன்வில, கங்கவடகோரள, உடபலாத, ஹாரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொளுவ, தும்பனை, அக்குறனை, உடுநுவர மற்றும் பாத்ததும்பர ஆகிய பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்ட மக்களை அங்கிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில், கேகாலை, கலிகமுவ, மாவனெல்லை, புலத்கோஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கனை, வரக்காபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களையும் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, மல்லவபிட்டிய, ரிதிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்கள், மாத்தளை மாவட்டத்தில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்ககோரள, லக்கல, பல்லேகம, உக்குவளை, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களையும் அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை, கம்பஹா, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங் களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளுடன் மக்களை அங்கிருந்து நீக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஆகிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவக்காற்று மழைநாட்டில் படிப்படியாக நிலைகொண்டு வருவதால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங் களில் இன்று (10) இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் ஒருசில பிரதேசங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அநேகமான பகுதிகளில் பகல் 1.00 மணியின் பின்னர் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், ஒருசில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டம், மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அமையுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் ஒருசில பகுதிகளில் காலையில் மூடுபனியுடனான வானிலை நிலவுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படும் தற்காலிக கடும் காற்று மற்றும் இடிமின்னலால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக்கொள்வதற்கு அவசிய நடவடிக்கை எடுக்கமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற அனர்த்தங்களால் இதுவரையில் மொத்தமாக 639 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் கடந்த நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய டிட்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களால் காணாமல்போன 203 பேர் நேற்று வரை தேடிக் கண்டுபிடிக்கப்பட் டிருக்கவில்லை என்பதுடன், அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 234 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பதுளை மாவட்டத்தில் 90 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 61 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொனராகலை மாவட்டத்தில் நால்வரும், மாத்தளை மாவட்டத்தில் 28 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஒன்பது பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நால்வரும், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும் பலியாகியுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 32 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 13 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 08 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூவரும், பொலன்னறுவை மாவட்டத்தில் இருவரும், காலி மாவட்டத்தில் ஒருவரும், கம்பஹா மாவட்டத்தில் 17 பேரும், மன்னார் மாவட்டத்தில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நேற்றைய அறிக்கையின்படி அனர்த்தங்களால் 5,29,741 குடும்பங்களைச் சேர்ந்த 18,24,771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,145 குடும்பங்களைச் சேர்ந்த 86,040 பேர் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 878 பாதுகாப்பு நிலையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மொத்தமாக 86,882 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 5,350 வீடுகள் முழுமையாகச் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
இந்தப் பின்னணியில் புத்தளம் மாவட்டத்தில் 1,02,077 குடும்பங்களைச் சேர்ந்த 3,67,251 பேர் பாதிப்படைந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் 28,002 குடும்பங்களைச் சேர்ந்த 91,256 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 1,533 குடும்பங்களைச் சேர்ந்த 5,290 பேரும்,
கொழும்பு மாவட்டத்தில் 85,957குடும்பங்களைச் சேர்ந்த 3,29,490 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 7,288 குடும்பங்களைச் சேர்ந்த 25,813 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 37,389 பேரும், கேகாலை மாவட்டத்தில் 22,254 குடும்பங்களைச் சேர்ந்த 79,784 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 26,009 குடும்பங்களைச் சேர்ந்த 86,685பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 22,063 குடும்பங்களைச் சேர்ந்த 72,742 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 22,918 குடும்பங்களைச் சேர்ந்த 67,340 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8,933 குடும்பங்களைச் சேர்ந்த 28,246பேரும், அம்பாறை மாவட்டத்தில் 6,942 குடும்பங்களைச் சேர்ந்த 23,781 பேரும், யாழ். மாவட்டத்தில் 16,918 குடும்பங்களைச் சேர்ந்த 53,828 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 11,570 குடும்பங்களைச் சேர்ந்த 41,128 பேரும், கண்டி மாவட்டத்தில் 54,716 குடும்பங்களைச் சேர்ந்த 1,71,127 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 18,677 குடும்பங்களைச் சேர்ந்த 72,647 பேரும்,
குருநாகல் மாவட்டத்தில் 25,651 குடும்பங்களைச் சேர்ந்த 87,976 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 19,780 குடும்பங்களைச் சேர்ந்த 63,121 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 448 குடும்பங்களைச் சேர்ந்த 1,671 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,066 குடும்பங்களைச் சேர்ந்த 7, 466 பேரும், காலி மாவட்டத்தில் 518 குடும்பங்களைச் சேர்ந்த 1,795 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 2,013 குடும்பங்களைச் சேர்ந்த 7,093 பேரும், மன்னார் மாவட்டத்தில் 23,641 குடும்பங்களைச் சேர்ந்த 77,451 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 978 குடும்பங்களைச் சேர்ந்த 3,616 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6,320 குடும்பங்களைச் சேர்ந்த 20,785 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
