டிட்வா புயலால் பதிவான அதிக மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நாடு முழுவதும் கழிவுப் பொருட்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், எதிர்பாராதளவுக்கு கழிவுகள் தோற்றம் பெற்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பிரதேசங்களில் வீடு மற்றும் கடைத் தொகுதிகள் உள்ள இடங்களில் பெருந்தொகை கழிவுகள் உருவாகியுள்ளதுடன், அவை தற்போதும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
அனர்த்தங்களின் காரணமாக எந்தளவு கழிவுத் தொகை தோற்றம் பெற்றுள்ளதென்பது தற்போது சரியாகக் கூற முடியாதென்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒருசில பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை, சுத்தப்படுத்தல் செயற் பாடுகளில் காலதாமதம் அல்லது அவை தற்போதுவரையில் முடிவுக்குக் கொண்டுவரப்படாமை போன்று நடைமுறைப் பிரச்சினைகளால் எவ்வளவு கழிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்பதை மதிப்பீடு செய்ய முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருந்தபோதும், பேரிடர் காலப்பகுதியில் தோற்றம்பெற்ற கழிவுத்தொகையை முறையாக முகாமைத்துவம் செய்யவேண்டுமென்றால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைபடலா மென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளின் அநேகமான பகுதிகளில் தற்போதுவரையில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கழிவுகளை அந்தப் பிரதேசங்களிலிருந்து அகற்றுவது கூட சிக்கலுக்குரிய விடயமாக மாறியுள்ளது.
அந்தக் கழிவுகளை அகற்றுவதற்காக உள்ளூராட்சி சபைகளுக்கு விரிவாக்கப்பட்ட விதிமுறைகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுத் தொகையை உள்ளூராட்சி சபை நிறுவனங்களின் மட்டத்தில் தற்காலிகமாக பொருத்தமான இடங்களைத் தேடி களஞ்சியப் படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் திலக் ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களால் அழிவுக்குள்ளாகியுள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதிபெற்ற இடங்களுக்கு அகற்றுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
