Our Feeds


Monday, December 22, 2025

Zameera

வெள்ள அபாயம் இல்லை


 மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மகாவலி ஆற்றுப் படுக்கையில் உள்ள சில நீர்த்தேக்கங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளரும், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளருமான எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

அத்துடன், அனுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிகமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு உயர்வாகக் காணப்பட்டாலும், அனுராதபுரம் மாவட்டத்தில் பல நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலையிலும், சிறிதளவு மழைவீழ்ச்சி நிலவினாலும், அந்நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பாரிய அளவில் அதிகரிப்பை வெளிப்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் கிடைத்த மழைவீழ்ச்சிக்கு அமைய, அம்பாறை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், அது 25 மில்லிமீற்றர் எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். 

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், ஏனைய பல இடங்களில் சிறிதளவு மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான்பாய்ந்து வருகின்ற போதிலும், அந்த நீர்த்தேக்கங்கள் எதுவும் ஆபத்தான நிலையில் வான்பாயவில்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். 

அத்துடன், 52 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாகவும், அந்த எந்தவொரு நீர்த்தேக்கத்திலும் ஆபத்தான வகையில் வான்பாயவில்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »