Our Feeds


Friday, December 5, 2025

Zameera

சேதமடைந்த வீதிக் கட்டமைப்புகளின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் - ஜனாதிபதி


அனர்த்தத்திற்குப் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் போது, சேதமடைந்த வீதிக் கட்டமைப்பை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


டித்வா சூறாவளியால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பற்றிய தகவல்களை ஆராய்வதற்கும், அவற்றை சீர்செய்ய எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை சீர்செய்வது, அதற்கு எடுக்கும் காலம் மற்றும் தொடர்புடைய நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் A மற்றும் B தர வீதிகள் சுமார் 247 கிலோமீட்டர் சேதமடைந்துள்ளதாகவும், 40 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பகுதியளவில் சேதமடைந்த 256 வீதிகளில் தற்போது 175 வீதிகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், பணிப்பாளர் நாயகம் கே.டபிள்யூ. கண்டம்பி உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »