Our Feeds


Sunday, December 14, 2025

Zameera

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை


 அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் சேதமடைந்த கல்நேவ பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களை மீண்டும் பயிரிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் போகத்தில் பயிரிடப்படும் நாட்டு அரிசியைத் தவிர ஏனைய விளைச்சல்களுக்கு அதிக விலையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த,

“மீண்டும் எழுவது குறித்த பாரிய அனுபவம் விவசாய மக்களுக்கே உள்ளது. விவசாய மக்கள் இந்த அழிவின் போதும் மீண்டும் எழுவார்கள் என்பது குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த அழிவு ஏற்பட்டவுடன், விவசாயிகள் பயிரிடுவார்கள் அதில் பிரச்சினையில்லை, ஆனால் விதை நெல் பிரச்சினை வரக்கூடும் என்றே எமது மனதில் முதலில் தோன்றியது. ஆனால் விதை நெல் குறித்து எங்கும் பேச்சுக்களே இல்லை.

அதனால் எதிர்காலத்தில் அரிசி பிரச்சினை வருமென யாராவது நினைத்துக் கொண்டிருந்தால், அவ்வாறான பிரச்சினை எதுவும் இல்லை.

பயிரிடப்படும் அளவுகளில் உள்ள மாற்றங்கள் காரணமாக சில வகைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வர வேண்டியுள்ளது.

கடந்த நாட்களில் நாம் கீரி சம்பாவை குறிப்பிட்டளவு இறக்குமதி செய்தோம்.

கீரி சம்பா பயிரிடப்படும் அளவு குறைந்ததாலேயே அதனை இறக்குமதி செய்ய நேரிட்டதே தவிர, நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவுவதால் அல்ல எனத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »