(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
மலையகத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும், வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் முழுநாடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த மோசமான நிலைமையில் பலர் உயிரிழந்துள்ளதுடன். பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் 123 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 6959 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 89 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்யலாம் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும். அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே இந்த அனர்தத்திற்கு காரணமாகும். இதனை தவிர்த்திருக்கலாம்.
இதேபோன்று பதுளை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டியெழுப்ப எத்தனை வருடங்கள் போகுமென்றே தெரியவில்லை. இந்த மக்களுக்கான உடனடி தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
நுவரெலியாவில் தோட்டத்துறை, விவசாயத்துறை மற்றும் சுற்றுலாத்துறை என மூன்று பிரிவுகளில் மக்கள் தொழில் புரிகின்றனர். தோட்டத்துறையில் அதிகமான தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கந்தபொலவில் இருந்து ராகலை செல்ல முடியாதவாறு வீதிகள் சேதமடைந்துள்ளன. இப்போது முகாம்களில் இருப்பவர்களை வீடுகளுக்கு போகுமாறு தோட்ட முகாமையாளர்கள் கூறுகின்றனர். அச்சம் காரணமாகவே முகாம்களுக்கு வந்திருக்கின்றனர்.. இவர்களை பாதுகாக்க வேண்டும். இவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணிகளை வழங்கி வீடுகளை அமைத்துக்கொடுங்கள். இவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என்றே கோருகின்றோம். வீடுகள் இன்றி தொழிலுக்கும் போக முடியாது. அவர்களுக்கு அதற்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளை அமைத்துக்கொடுங்கள். நீர் விநியோகத்தை செய்யுங்கள்.
அத்துடன் சுற்றுலாத்துறைக்கு ரயில்கள் அவசியமாகும். இதனால் ரயில் பாதைகளை சீரமைத்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டும். எமது அயல்நாடான இந்தியா எங்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கியுள்ளது. இந்தியாவிடம் ரயில் பாதை சீரமைக்க உதவிகளை கேட்க முடியும். இந்தியாவுக்கும் அந்நாட்டு பிரதமருக்கும் மற்றும் இங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கும் நாங்கள் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.
விவசாயத்துறையில் நுவரெலியா முழுமையாக அழிவடைந்துள்ளது. எனது தோட்டத்தில் ஐந்து ஏக்கர் பகுதியும் அழிந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்குங்கள். அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள். இல்லையென்றால் எதிர்காலத்தில் மரக்கறி கிடைக்காமல் போகலாம். இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் உறுதியளித்த சம்பளத்தை வழங்குமாறும் கோருகின்றேன்.
வெளிநாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குகின்றன. அதன்மூலம் நாட்டை கட்டியெழுப்புவோம். அரசியலை பின்னர் செய்வோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக கட்டியெழுப்புவோம் என்றார்.
