Our Feeds


Monday, December 8, 2025

Zameera

சேதமடைந்த பயிர்கள் தொடர்பில் வௌியான தகவல்


 சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பாக, விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க இன்று விசேட விளக்கமளித்தார். 


அனர்த்த நிலைமை காரணமாக 108,000 ஹெக்டேர் நெல் வயல்களும், 6,600 ஹெக்டேர் சோளப் பயிர்களும், மலையக மற்றும் தாழ்நில மரக்கறிப் பயிர்களில் 6,143 ஹெக்டேர்களும், அத்துடன் 11,000 ஹெக்டேர் ஏனைய பயிர்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக செயலாளர் அங்கு தெரிவித்தார். 

இவ்வாறு முழுமையாக அழிவடைந்த ஒட்டுமொத்த பயிர்ச் சேதங்களுக்காக நஷ்டஈடு வழங்கும் துரித நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க: 

"நாட்டில் 615,000 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டிருந்தது. அதில் 108,000 ஹெக்டேர் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. 87,474 ஹெக்டேர் சோளம் பயிரிடப்பட்டிருந்தது, அதில் 6,600 ஹெக்டேர் அழிவடைந்துள்ளது. ஏனைய களப் பயிர்களை எடுத்துக்கொண்டால், நாம் 27,600 ஹெக்டேர் பயிரிட்டுள்ளோம், அதில் 11,000 ஹெக்டேர் முழுமையாக அழிவடைந்துள்ளது. மரக்கறிகளை எடுத்துக்கொண்டால், மலையகத்தில் 5,893 ஹெக்டேரில் 2,613 ஹெக்டேர் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. தாழ்நில மரக்கறிகளைப் பார்த்தால், 8,990 ஹெக்டேரில் 3,530 ஹெக்டேர் முழுமையாக அழிவடைந்துள்ளது. இந்த விவசாய நிலங்களில் பயிரிடுவதற்குச் செலவிடப்பட்ட செலவு மற்றும் அந்த நிலங்களை மீண்டும் விவசாய நிலங்களாக மாற்றுவதற்காக, நிதி அமைச்சினால் விசேட சுற்றறிக்கை மூலம் நிதி ஒதுக்கும் முறைமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு ஹெக்டேர் நெல் வயலுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) ரூபா நஷ்டஈடும், சோளம் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) ரூபாவும், மரக்கறிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் (200,000) ரூபாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில விவசாயிகள் ஏற்கனவே விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு, இந்த அங்கீகரிக்கப்பட்ட நிதியை விரைவில் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் ஏதேனும் ஒரு விவசாயிக்கு ஏதேனும் தாமதம் ஏற்படுவதாகத் தோன்றினால், அவர்கள் நேரடியாக எமது 1918 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைத் தெரிவிக்கலாம்."

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »