நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அவர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், வீட்டிலிருந்த நபர் ஒருவரைத் தாக்கும் வீடியோ ஒன்று கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தும் நபர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி என்பது இதன்போது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, குறித்த அதிகாரியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
