Our Feeds


Monday, December 22, 2025

Zameera

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு


 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 


இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 

2025 நவம்பர் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,364.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

இது 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.56% வருடாந்த வளர்ச்சியாகும். 

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க, 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது என்றும், இது வருடாந்தம் ஒரு வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். 

பிரதான சந்தைகள் வழமைக்குத் திரும்புதல், நிலையான உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி மூலோபாயங்களை திறம்பட செயற்படுத்தியமை ஆகியன இலங்கையின் ஏற்றுமதித் துறையின் பலத்தையும் போட்டித்தன்மையையும் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த வளர்ச்சியானது உலகளாவிய வர்த்தகத்துடன் இலங்கை அதிகமாக ஒன்றிணைவதையும், சந்தை வாய்ப்புகளை பல்வகைப்படுத்தி ஏற்றுமதி போட்டித்தன்மையை பலப்படுத்த முன்னெடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது. 

எமது ஏற்றுமதியாளர்கள் மாறிவரும் உலகளாவிய சந்தைக்கு ஏற்ப இசைவாக்கமடைவதையும், அவர்களின் ஸ்திரத்தன்மையையும் இது மீண்டும் புலப்படுத்தியுள்ளது. 

2025 நவம்பர் மாதம் நிறைவடையும் போது வருடாந்த ஏற்றுமதி இலக்கில் 86.3% க்கும் அதிகமான அடைவை எட்டியுள்ளமை இலங்கையின் ஏற்றுமதி சமூகத்தின் பலம் மற்றும் அர்ப்பணிப்புக்கான தெளிவான சான்றாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »