Our Feeds


Saturday, December 6, 2025

Zameera

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன


 நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்கள் முற்றாகச் சேதமடைந்து, தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 


மேலும், தற்போது அறுவடைக் காலம் என்பதால், இந்த அழிவின் காரணமாகத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் பல்வேறு துணைத் தொழில்களும் இதனால் நலிவடைந்து வருகின்றன. 

நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள மரக்கறித் தோட்டங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் மலைநாட்டு மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரட், லீக்ஸ், கோவா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன. 

தொடர் மழையினால் தாழ்வான விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், அறுவடைக்குத் தயாராக இருந்த மரக்கறிகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன அல்லது மண்ணில் புதைந்து போயுள்ளன. அத்துடன், வெள்ள நீர் காரணமாகப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்கங்கள் அதிகரித்து, மரக்கறிகளைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விளைச்சலைக் குறைத்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளப்பெருக்கின் போது ஆற்று மணலும் சேறும் கலந்த மழைநீர் விவசாய நிலங்களில் பாய்ந்துள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரும், மணலும் சேறும் நிலத்தில் அப்படியே தங்கிவிடுவதால், விவசாய நிலங்களின் தன்மை மாறி, அவை பயிர்செய்ய முடியாத தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. அத்துடன் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, மண் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கந்தப்பளை போன்ற பகுதிகளில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மழைநீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாமை, நீர்ப்பரப்புப் பகுதிகளில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆறுகளைச் சரிவர ஆழப்படுத்தாமை ஆகியவையே இதற்குக் காரணம் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றின் காரணமாக நீர்நிலைகளின் கொள்ளளவு குறைந்து, ஒரு பெருமழைக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்கள் அழிவடைவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நஷ்டஈடுகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.

-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »