Our Feeds


Wednesday, December 17, 2025

Zameera

இலங்கையின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீனா பூரண ஒத்துழைப்பு




 டித்வா புயலால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார். 


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். 

அத்தோடு இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார். 

குறிப்பாக சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்து சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். 

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தாகவும் பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »