"மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும் ஜீவன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை!."
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) நடைபெற்றது.
நேற்றைய இந்த மாவட்ட ஒருங்கினைப்புக்குழு கூட்டத்தின் முதலாவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், நாட்டில் ஏற்பட்ட அசாதாரன காலநிலை மாற்றத்தினால் உயிரிழந்த நுவரெலியா மாவட்ட சொந்தகளுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் "மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும்" என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
"சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், மலையகத்தில் பெரும் பிரச்சினையொன்று உள்ளது. அதாவது தோட்டத்தில் வேலைசெய்தால்தான் அடையாளம், சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. தோட்டத்தில் வேலை செய்யாத ஏனையோருக்கு எவ்வித அதிகாரமும் கிடைக்கப்பெறவில்லை. இந்த சமுறைமை மாற வேண்டும். இது பற்றி மக்களிடம் நேரில் சென்று கேட்டறியலாம்." என்றும் கருத்தினை பதிவிட்டிருந்தார்.
பெருந்தோட்டப்பகுதிகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. பாதீட்டு ஒதுக்கீட்டின் பிரகாரம் வருடமொன்றுக்கு 2 ஆயிரம் வீடுகளை அமைத்தாலும் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
தமக்கு வீடு வேண்டும் என்ற சிந்தனையே மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, அவர்கள் வாழ்வதற்குரிய காணி உரிமையை வழங்கினால் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி பிறக்கும். என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
“பேரிடர் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை தீர்ப்பதற்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் நாம் விரிவாக பேசுவோம்.
ஒருவருக்கு 6 பேர்ச்சஸ் என வைத்தாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு 9 லட்சம் பேர்ச்சஸ் காணி தேவைப்படும். இதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது, தொழில்நுட்ப காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களை (மலையக பிரதிநிதிகளை) சந்தித்து கலந்துரையாட உள்ளேன்.
தேசிய வேலைத்திட்டமொன்றை அமைத்து இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்போம்." என்றார் ஜனாதிபதி.
" மக்களுக்கு வழங்குவதற்குரிய காணி வளம் உள்ளது. மக்கள் தற்போது வாழும் லயன் அறைகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை வழங்கினாலேயே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்ள முடியும். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்று 2024 இல் நிறைவேற்றப்பட்டது. அதனை அமுல்படுத்தலாம்." என்றும் ஜீவன் தொண்டமான் இறுதியாக கருத்து தெரிவித்திருந்தார்.
பெ.கோபிநாத்
ஊடக செயலாளர்
(ஜீவன் தொண்டமான்)
