குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும்
சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல, மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.2024ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் 'நெலும் பியச' மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்,
குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது எமது கொள்கையல்ல. மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நாம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகிறோம். 'திட்வா' புயலினால் நாட்டின் பல மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீதிகள் சேதமடைந்தன. சுமார் ஐம்பதாயிரம் மக்கள் இன்னமும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
யுத்தம் காரணமாக வடபகுதி மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்வு முகாம்களில் வாழ்ந்த கசப்பான அனுபவங்களை அறிவோம். எனவே, புயலினால் பாதிக்கப்பட்டவர்களை அத்தகைய முகாம்களில் நீண்டகாலம் வைத்திருக்க எமது அரசாங்கம் விரும்பவில்லை.
இதற்காக 500 பில்லியன் ரூபா மதிப்பிலான குறைநிரப்புப் பிரேரணையை அண்மையில் நிறைவேற்றினோம். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முறையான பொருளாதார முகாமைத்துவத்தால், இதற்காகக் கடன் வாங்காமலேயே நிதியை ஒதுக்க முடிந்தது.
கல்வித் துறை மீது நாம் விசேட கவனம் செலுத்தி வருகிறோம். பிள்ளைகளின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தவே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.
2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, கல்வி முறையைப் பலப்படுத்துவோம். வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களின் தண்ணீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.
அண்மையில் நடத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வின்படி, வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும். 2026ஆம் ஆண்டில் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்ப்பாணம் ஒரு கல்வி மையம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கல்வியின் தரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எமது இலக்கு என்றார்.
