இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வரும் 23ஆம் திகதி செவ்வாயன்று ஒரு நாள் விஜயமாக கொழும்பு வருகிறார்.
கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசும் அவர் கொழும்பில் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்குக் கூட்டணி) ஆகிய தரப்பினரை ஒன்றாகச் சந்திக்கவிருக்கிறார் எனத் தெரியவருகிறது.
ஏற்கனவே இதே 23ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், சங்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களுமாகச் சேர்ந்து இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையையொட்டி அந்தச் சந்திப்பு தள்ளிப் போய் இருப்பதாகத் தெரிய வருகிறது.
இலங்கையில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிகளான ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் மாத இறுதியில் புதுடில்லி செல்கின்றார் என்று கூறப்படும் பின்னணியில் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வருகை தந்து இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
