குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதற்காக பயன்ப டுத்தப்படும் ஒந்தன்செட்ரொன் (Ondansetron) எனும் தடுப்பூசியை பயன் படுத்தியமையால் இரு மரணங்கள் பதிவா கியுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்தை விநியோகிக்கப்பட்ட மான் ஃபார்மாசூட்டிகல்ஸ் (MAAN Pharmaceuticals) நிறுவனத்தின் மருந்து தொகுதிகளில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அரச வைத்தியசாலைகளில் ஒந்தன்செட்ரொன் தடுப்பூசி கடந்த சனிக்கிழமை முதல் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒந்தன்செட்ரொன் (Ondansetron) எனும் மருந்து பயன்படுத்தியமையினால் மரணங்கள் பதிவாகியுள்ளனவா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் இரு உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 37 வயதுடைய ஹபரகட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், 23 வயதுடைய மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, கண்டி தேசிய வைத்தியசாலையிலும் கடந்த 12ஆம் திகதி இந்த மருந்தை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் ஏற்பட்ட சிக்கல் நிலைகளும் பதிவாகியுள்ளன. அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ஒந்தன்செட்ரொன் மருந்தை முழுமையாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஒந்தன்செட்ரொன் என்ற மருந்தை இலங்கைக்கு விநியோகிப்பதற்கு 11 பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.
சாதாரணமாக ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் ஒரு மருந்து விநியோகத்துக்காக 15 விநியோகஸ்தர்கள் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இந்த 11 விநியோகஸ்தர்களில் 04 விநியோகஸ்தர்கள் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படும் மருந்தை விநியோகிக்கிறார்கள். மேலதிகமாகவுள்ள 07 பேரும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தையே விநியோகிக்கிறார்கள். அவ்வாறெனில், இந்த 11 விநியோகஸ்தர்களும் ஒன்று, பங்களாதேஷிலிருந்து விநியோகிக்கிறார்கள்.
அவ்வாறு இல்லாவிட்டால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒந்தன்செட்ரொன் தடுப்பூசியையே நாட்டுக்கு விநியோகிக்கிறார்கள். இவர்கள் சகலரும் ஐக்கிய அமெரிக்க பார்மகோபியா (United States Pharmacopeia USP) தரச்சான்றிதழின் அடிப்படையிலேயே அவர்கள் மருந்து விநியோகம் செய்கிறார்கள். ஒந்தன்செட்ரொன் தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்த மருந்து ஐக்கிய அமெரிக்க பார்மகோபியா தரச்சான்றிதழின் அடிப்படையிலேயே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது நாட்டில் பயன்பாட்டிலுள்ள இந்த தடுப்பூசி மூன்று சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முதலாவது சந்தர்ப்பமாக 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி வைத்திய விநியோகப்பிரிவினால் கொள்முதலொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும் 13ஆம் திகதிக்கும் இடைப்பட்ட பகுதியில் விலைமனுகோரல் நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த கொள்முதல் நடவடிக்கைக்கு விநியோகஸ்தர்கள் 06பேர் முன்னிலையாகியுள்ளனர்.
அவர்களின் மேன் கைன்ட் பாமா இந்தியா (Mankind Pharma) என்ற நிறுவனமே குறைந்த விலையில் முன்னிலையாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் மருந்தின் வலிமை போதாது என்பதால் அந்த நிறுவனம் விலகியுள்ளது. அதன் பின்னர் இரண்டாவது விநியோகஸ்தராக இருந்த மான் ஃபார்மாசூட்டிகல்ஸ் (MAAN Pharmaceuticals) நிறுவனத்துக்கு தொழில்நுட்ப குழுவில் அனுமதி கிடைத்துள்ளது.
அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த மருந்தின் பெறுமதி 20.82 ரூபாவாகும். இந்த மருந்து 24.98 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக விலைமனு வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்த நிலைமைகளின் அடிப்படையில் காலதாமதம் ஏற்பட்டு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் இரு கட்டங்களாக இந்த மருந்துகள் நாட்டை வந்தடைந்துள்ளன. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06ஆம் திகதி 649,600 அலகுகளும் ஜூலை மாதத்தில் 550,000 அலகுகள் என்ற அடிப்படையிலும் மொத்தமாக 11,99,600 அலகுகள் நாட்டுக்குக் கிடைத்துள்ளன.
சாதாரணமாக, ஒரு மாதத்துக்கு எமக்கு 135,000 ஒந்தன்செட்ரொன் என்ற மருந்து அலகுகள் தேவைப்படுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் 12 இலட்சம் அலகுகளை கொண்டுவருவதற்கே இந்த விலைமனு வழங்கப்பட்டிருந்தது. அதில் 11,99,600 அலகுகள் கிடைத்துள்ளன. அந்த மருந்துகள் தற்போது பாவனையில் இருக்கின்றன. இந்த மருந்துகளை மான் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமே விநியோகித்துள்ளது.
அடுத்தது, 2022 ஆம் ஆண்டு இதனுடன் தொடர்புடைய வகையில் 04 இலட்சத்து 50 ஆயிரம் வரையிலான மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கிடைத்துள்ளன. ஒரு அலகு 25.99 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்து தொகையை சைரோன் ட்ரக்ஸ் எனட் ஃபார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் பெற்றுக்கொடுத்துள்ளது.
இதேவேளை, இந்த மருந்து தொகையில் 3,75,000 தொகுதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக இன்னுமொரு விலைமனுகோர நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அது 2024 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி இந்த கொள்முதல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜூலை 02ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் 15ஆம் திகதிகளுக்கிடையில் கொள்முதல் செயற்பாடுகள் இடம்பெற்று 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி 2,50,000 தொகுதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே, தற்போது வரையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மான் ஃபார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான கொள்முதலுக்காக 2025 ஆம் ஆண்டு விநியோகித்த தொகையில் ஒரு தொகுதிக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான கொள்முதலுக்காக 2025 ஆம் ஆண்டு விநியோகித்த தொகுதியிலும் இருந்த ஒருசில மாதிரிகளினாலேயே உருவாகியுள்ளது.
இந்த மருந்துகளின் எதிர் விளைவுகள் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மரணங்கள் தொடர்பிலும் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சனிக்கிழமை காலையிலிருந்து இந்த மருந்துப் பயன்பாடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மான் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதி ஐந்து வருடங்களுக்கு பதிவு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனத்தின் தொகுதிகளில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 85 சதவீத மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. பரிசோதனைகளை தொடர்ந்தே இந்த மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் களஞ்சியத்திலுள்ள ஒவ்வொரு மருந்துகளையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை’’ என்றார்.
