Our Feeds


Wednesday, February 25, 2026

Zameera

விக்டர் ரத்நாயக்க நமது நாட்டிற்குக் கிடைத்த உன்னதப் பரிசு - பிரதமர் ஹரிணி அமரசூரிய


 இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தினால் விக்டர் ரத்நாயக்கவைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட "சுபாவித கீதயே சிட்டுவரயானோ... விக்டர் ரத்நாயக்க அபிநந்தனாபிஷேக" எனும் விசேட பாராட்டு விழா, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (24) இலங்கை வானொலியின் 'குமாரதுங்க முனிதாச' கலையகத்தில் நடைபெற்றது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டு இசைத்துறைக்கும் வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கும் விக்டர் ரத்நாயக்க ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டுவதே இவ்விழாவின் நோக்கமாகும். இதன் ஓர் அங்கமாக, வானொலிக் கூட்டுத்தாபன வளாகத்தில் அவரது திருவுருவப்படம் ஒன்றும் பிரதமரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

நானும் விக்டர் ரத்நாயக்கவின் தீவிர ரசிகை என்பதால் இந்தத் தருணம் எனக்கு மிகவும் விசேடமானது. எனது வாழ்நாளில் உங்களை இவ்வளவு நெருக்கமாக நின்று கௌரவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, இது மிகவும் மகிழ்ச்சியானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான தருணமாகும்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் நமது நாட்டின் இசைத்துறைக்கு ஆற்றிய சேவை ஈடுஇணையற்றது. இலங்கையில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட உங்களது தனிநபர் இசை நிகழ்ச்சியான 'ச' பிரசங்கமே, எனது சிறுவயதில் நான் பார்த்து ரசித்த முதலாவது இசை நிகழ்ச்சியாகும்.

சிங்கள மொழியின் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது உங்களது பாடல்களே. உங்களது பாடல்கள் காதல் பற்றிய நுட்பமான, அதேவேளை அற்புதமான படைப்புகளாக அமைந்திருந்தன. இசையும் மொழியும் இணைவதன் மூலம் எம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை உங்களது பாடல்கள் மூலமே நான் உணர்ந்தேன்.

அதேபோல், உங்களது பாடல்களில் பொதிந்துள்ள இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்த கருத்துக்கள் நாம் வெகுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். 'சருங்களே' திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 'ஒப யன கமனே' போன்ற பாடல்களின் இசையமைப்பும் பாடிய விதமும், பல்லினக் கலாசாரங்களின் அழகியலை மிகவும் தத்ரூபமாக எமக்குக் கற்றுத் தந்தன. உண்மையிலேயே உங்களைப் போன்றதொரு பெறுமதிமிக்கப் பரிசு எமது நாட்டிற்குக் கிடைத்தமைக்காக நாம் பெருமையடைகின்றோம்."

வாழ்க்கையின் எல்லாவிதமான முக்கிய தருணங்களுக்கும் பொருத்தமான படைப்புகள் விக்டர் ரத்நாயக்க அவர்களின் ஆக்கங்களுக்கு மத்தியில் காணப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 18ஆம் திகதி தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்டர் ரத்நாயக்க, நீண்ட ஆயுளுடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென வாழ்த்திய பிரதமர், இவ்வாறானதொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கு நன்றி தெரிவித்தார். ஊடகத்துறையில் தற்போது காணப்படுகின்ற போட்டிகளுக்கு மத்தியிலும், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் அனைத்துச் சவால்களையும் முறியடித்து முன்னோக்கிச் செல்லும் சக்தியைக் கொண்டிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கலைத்துறையைச் சார்ந்த தலைசிறந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் இத்தகைய வேலைத்திட்டங்களைப் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர, விக்டர் ரத்நாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »