'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட பாதாள உலகக்
குழு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த அரசியல்வாதிகள்குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபரான 'பத்மே' உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த விபரங்கள்:
"கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 30 தொலைபேசிகள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் தொலைபேசி தரவுகள் மற்றும் சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் இணைந்து பணியாற்றிய அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன."
இந்த விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைகளின் பின்னர் இது குறித்த விரிவான விபரங்களை நாட்டுக்கு வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் சுட்டிக்காட்டினார்.
