Our Feeds


Friday, February 13, 2026

SHAHNI RAMEES

பங்களாதேஷின் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான்!

 


வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில்

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. 2 மாத கால போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.


தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து, வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.


இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 6 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.


இதில், அந்நாட்டின் இடைக்கால தலைவர் மற்றும் தலைமை ஆலோசகரான யூனூஸ் குல்ஷான் மாடல் பள்ளி மற்றும் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிக்கு இன்று காலை வந்து வாக்களித்து விட்டு சென்றார். பல்வேறு அரசியல் பிரமுகர்களும், கட்சி தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.



இந்நிலையில், வங்காளதேச தேர்தலில் பிற்பகல் 2 மணியளவில், 47 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு மாலை 4:30 மணிக்கு முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடந்து வருகிறது. நாளை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த தேர்தலில் பல புதிய கட்சிகள் போட்டியில் உள்ளன. முன்பு தடை செய்யப்பட்டு, அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்திருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தற்போது வலுவான கட்சியாக வளர்ந்துள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியி தடை விதிக்கப்பட்டது. மாணவர் அமைப்புகளும் தேர்தலில் களமிறங்கி உள்ளன.


இதில், வங்காளதேச தேசியவாத கட்சி முக்கிய கட்சியாக உள்ளது. அது தேர்தலில் முன்னிலையில் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானால் அக்கட்சி தொடங்கப்பட்டது. நாட்டின் தேசியவாதத்தில் அக்கட்சி கொள்கை வேரூன்றியுள்ளது. இதனால், இனம், பாலினம் அல்லது நிறம் போன்றவற்றை கவனத்தில் கொள்ளாமல் அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்கும் அங்கீகாரம் அளிக்கிறது.


அக்கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக வரக்கூடும் என கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகனான இவர், கருப்பு இளவரசர் என்றும் அழைக்கப்படுகிறார். மூன்று முறை பிரதமராக பதவி வகித்த கலீதா ஜியா இவருடைய தாயாராவார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »