2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டுள்ளதை இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர், சுரேஷ் சல்லே இன்று காலை பேலியகொடை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் விளைவாக பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்,” என்று அவர் கூறினார்.
எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிய நேரத்தில் விளக்கமளிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மத்தியிலும், சல்லேக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தற்போது வெளிப்படுத்தப்படாது என்றும், அவருக்கு எதிரான விசாரணை நிறைவடைந்த பின்னரே அவை வெளியிடப்படும் என்றும் ஊடக சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சல்லே, மேலதிக விசாரணைக்காக 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்படவுள்ளார்.
