எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேசிய தேர்தல்களில் கூட்டணி ஊடாகவே போட்டியிடுவோம் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தற்போது பலமாக உள்ளோம். பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷர்கள் மீது கடந்த காலங்களில் தவறான போலியான குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டன.
75 ஆண்டுகால அரசியலும் சாபம் என்று விமர்சித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 75 ஆண்டுகால அரசியல் செயலொழுங்கையே ஜனாதிபதி பின்பற்றிச் செல்கிறார்.
ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிப்பதற்கு அரசாங்கம் திணறுகிறது.
சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
அவ்வாறாயின் விசாரணைகளை அமைச்சரவையா முன்னெடுக்கிறது.
-இராஜதுரை ஹஷான்
