Our Feeds


Saturday, February 21, 2026

SHAHNI RAMEES

வாகன இறக்குமதி அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்து கட்சிநிதிக்கு பணம் வைப்பு? - மரிக்கார் குற்றச்சாட்டு

 


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபை முதல்வர்

பிமல் ரத்நாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான  நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கடந்த காலங்களில் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள். அவற்றை விற்பனை செய்து அந்த நிதியை கட்சியின் நிதியத்தில் வைப்பிலிட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற 'வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்' தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வாகன இறக்குமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு அவற்றை விற்பனை செய்து அந்த நிதியை கட்சியின் நிதியத்துக்குச் செலுத்தினார்கள்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபை முதல்வர் பிமல்ரத்நாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான  நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் வாகன இறக்குமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள். அதற்கான பத்திரங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.



கடந்த காலங்களில் சகல சிறப்பு சலுகைகளையும் பெற்று விட்டு இன்று இவர்கள் தூய்மையானவர்களை போன்று பேசுகிறார்கள். நாங்கள் தூய்மையானவர்கள், ஊழல் மோசடியில்லை. உண்மையை மட்டும் பேசுபோம் என்று குறிப்பிட்டவர்களின் சுயரூபம் நாளாந்தம்  வெளிவருகிறது.


மக்கள் ஆணை இன்றும் உள்ளது. ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது  என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் மாகாண சபைத்  தேர்தலை நடத்துங்கள். அப்போது மக்களின் அபிலாசையை நன்கு தெரிந்துக் கொள்ளலாம்.


ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.  மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்கள் தற்போது வெளிப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துங்கள் யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை  தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »