Our Feeds


Friday, March 13, 2026

Zameera

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது ?? 20ஆம் திகதி விஜித்த ஹேரத் தலைமையிலான செயற்குழு கூட்டம்


 (இராஜதுரை ஹஷான்)


மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு அதன் தலைவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதன் முறையாக கூடவுள்ளது.


விசேட செயற்குழுவின் சகல உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.



மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர்  விஜித்த ஹேரத் தலைமையில் 12 பேரை உள்ளடக்கிய விசேட செயற்குழு ஒன்று சபாநாயகரால் அண்மையில் நியமிக்கப்பட்டது.


இந்த குழுவில் இணை உறுப்பினர்களாக ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியை  பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல,முனீர் முழப்பர், அருன் ஹேமசந்திரா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் நிபுணராச்சி,சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க,சந்தன சூரியராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர்  சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.


மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்றை  நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான   நளிந்த ஜயதிஸ்ஸ 2026.01.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் ஒரு யோசனையை முன்வைத்தார்.


அந்த யோசனையில், 1988 ஆம்  ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்து தற்போது வழக்கில் உள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கமைய தொகுதி,எல்லை நிர்ணய  முறைமை இதுவரையில் நிறைவுப்படுத்தாத காரணத்தால் சகல  மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்  தற்போது  இயங்குகிறது.


தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானத்து அதற்குரிய திருத்தங்களை முன்வைக்க 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து அதன் பின்னர் சட்ட வரைவை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரையில் விகிதாசார தேர்தல் முறைமையின் தேர்தலை நடத்தலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »