Our Feeds


Monday, March 23, 2026

SHAHNI RAMEES

இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்! - 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட மொஹம்மட் சுஹைல்! - மன்னிப்பு கோரி நஷ்டஈடு வழங்கினார் பொலிஸ் அதிகாரி



இஸ்ரேலை எதிர்த்த ஸ்டிக்கர் பதிவுக்காக 9 மாதங்கள் தடுத்து

வைக்கப்பட்ட இளைஞர்;

மன்னிப்பு கோரி நஷ்டஈடு வழங்கினார் பொலிஸ் அதிகாரி


######################


மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) கீழ் மேற்கொள்ளப்பட்ட கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என இன்று (23) உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.


சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதுடன், நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டார்.


21 வயதான மொஹம்மட் ரிஃபாய் மொஹம்மட் சுஹைல், 2024 அக்டோபரில் சமூக ஊடகங்களில் இஸ்ரேல் கொடியை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாகக் கூறி பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.


நீதிமன்றத்தில் இன்று 23ஆம் திகதி திங்கட்கிழமை முன்னிலையாகிய முன்னாள் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி H.M.A.B. ஹேரத், நீதிமன்றத்திற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.


இதன் காரணமாக இளைஞர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் ஏற்றுக்கொண்டார்.


அவர் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன், இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஒப்புக்கொண்டு, திறந்த நீதிமன்றத்தில் ரூ. 2 மில்லியன் நஷ்டஈட்டை வழங்கினார்.


இந்த மனு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இந்த வழக்கில் குற்றச்சாட்டு சுமத்த எந்த அடிப்படையும் இல்லை என சட்ட மா அதிபர் அறிவுறுத்தியதையடுத்து, கல்கிஸ்ஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இளைஞரை விடுதலை செய்ததாக தெரிவித்தார்.


இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கிய நிலையில், உச்ச நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.


மேலும், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை திரும்பப் பெற இளைஞரும் இணக்கம் தெரிவித்தார்.


இந்த 21 வயதுடைய இளைஞர், சமூக ஊடகங்களில் இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக தவறான தகவல்களின் அடிப்படையில் PTA கீழ் கைது செய்யப்பட்டு செய்யப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »