Our Feeds


Wednesday, March 18, 2026

Zameera

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடன் சுமை 90,000 கோடியாகும்


 எரிபொருள் சிக்கனம் தொடர்பாக ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையிலான குறைந்தபட்ச எரிசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பான விரைவான அறிக்கையை அமைச்சு மட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.


அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன்  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.



நேற்று (16) அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின்படி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்திற்கான அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தடையின்றிப் பேணி, மக்களுக்குத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.



எரிபொருள் விலை அதிகரிப்புடன் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விலைக் கட்டுப்பாட்டிற்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.



பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள்:


* வர்த்தகத் துறை: சத்தோச உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மொத்த இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எரிபொருள் தேவைகள் குறித்த தகவல்களைத் திரட்டி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.



“எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கடன் சுமை 90,000 கோடியாகும். அந்த கடனை மகா திறைசேரி பொறுப்பேற்றுள்ளது. அந்தத் தொகைக்கான வட்டி எவ்வளவு என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கடனை அடைப்பதற்காகவே நாங்கள் வரி விதிக்கின்றோம்.” – ஜனாதிபதி



* சுற்றுலாத் துறை: சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவையை ஆராய்ந்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட QR முறையைப் பேணுவது குறித்தும், ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளை வழங்குவதற்கான வழிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.


* மீன்பிடி மற்றும் விவசாயம்: பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், அதன் ஒதுக்கீட்டு அளவுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கைகளுக்கு விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் எரிபொருள் வழங்கப்படுவதுடன், அந்தச் செயல்முறையை இலகுபடுத்துவதற்கு விவசாய அமைப்புகளை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.


* கைத்தொழில் துறை: கைத்தொழிலாளர்கள் குறித்த தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


* சுகாதாரச் சேவை: சுகாதாரச் சேவையை அத்தியாவசியச் சேவையாகப் பேணும் அதேவேளை, அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதேச ரீதியான எரிபொருள் இருப்புகளைப் பேணுதல், மருந்து மற்றும் உணவுப் போக்குவரத்துக்கான எரிபொருள் தேவைகள் குறித்து கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


தற்போதைய சூழ்நிலையில் தேசியப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானத் துறையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் பொதுப் போக்குவரத்துத் தேவைகளைத் திட்டமிட்டபடி முன்னெடுத்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் தகவல் கட்டமைப்பைப் பேணி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முழுமையான தலையீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலதிகமாக அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில் அமைச்சர்களான வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க, கே.டி. லால் காந்த, குமார ஜயகொடி, சுனில் ஹந்துனெத்தி, அநுர கருணாதிலக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »