Our Feeds


Monday, March 2, 2026

SHAHNI RAMEES

டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை! - ரணில்

 


பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக

மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்கள் குறித்து இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். 


ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை வழிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணானது என சுவிட்சர்லாந்தும் நோர்வேயும் சுட்டிக்காட்டியுள்ளன. 


இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது என்றும், இவ்வாறான உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். 


ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் மட்டும் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது, ஏனெனில் ஏனைய நாடுகள் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. 


ஆனால், ஈரான் தனது கடல் எல்லை வழியாக வரும் ஏனைய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி போக்குவரத்தை முடக்கினால், அது பெரும் நெருக்கடியை உருவாக்கும். எனினும், தற்போது வரை அவ்வாறு நடக்கவில்லை. 


ஜனாதிபதி ட்ரம்ப் உலகம் தனது விருப்பப்படி இயங்க வேண்டுமென எதிர்பார்க்கிறார், ஆனால் இது போன்ற ஆழமான பிரச்சினைகள் சிறிய நாடுகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »