(நா.தனுஜா)
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வருகைதந்துள்ள உம்ரா பயணிகள் அனைவரையும் https://forms.gle/YD26uHKC5NgQ5p7T7 என்ற இணைப்பின் ஊடாகத் தூதரகத்தில் பதிவுசெய்யுமாறு ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையில் மூண்ட போர் சூழ்நிலை தீவிரமடைந்து தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள பின்னணியிலேயே இலங்கைத் துணைத்தூதகரம் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அனைத்து உம்ரா யாத்ரீகர்களுக்கும் உரிய நேரத்தில் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காகவே இவ்விபரங்கள் கோரப்படுவதாக துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இதுகுறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விமானசேவை வழங்கல் நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் தொடர்புகொண்டு, இலங்கையிலிருந்து சென்ற உம்ரா யாத்ரீகர்கள் மீண்டும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களுக்கு அவசியமான உதவிகளை உரிய வேளையில் வழங்குவதுமே தற்போது முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
